பண்டைத் தமிழக வரலாறு: கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1974ஆம் ஆண்டு வெளியிட்ட கொங்குநாட்டுவரலாறு-பழங்காலம்-கி.பி. 250வரை எனும் நூல் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் மகேந்திரவர்மன்(1955) வாதாபிகொண்டநரசிம்மவர்மன் (1957), மூன்றாம்நந்திவர்மன்(1958) ஆகிய நூல்களை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளார்கள். இந்நூல்களில் காணப்படும் பல்லவ மன்னர்களின் வரலாறு இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மூலமாக வெளிவந்ததமிழ்நாடு-சங்ககாலம்-அரசியல்என்றநூலில்இலங்கையில்தமிழர் என்ற ஒரு பகுதியை மயிலை சீனி. வேங்கட சாமி அவர்கள் எழுதியுள்ளார். அப்பகுதியும் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பொருண்மை யோடு தொடர்புள்ள வேறுசில பத்திரிகைக் கட்டுரைகளும் இத்தொகுதியில் சேர்க்கப் பட்டுள்ளன.

பண்டைத் தமிழ்ச்சமூகம் துளு நாடு, சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு, தொண்டைநாடு, கொங்குநாடு என்னும் ஆறு பிரிவுகளைக் கொண்டிருந்தது. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான வரலாறுகள் உண்டு. இவற்றுள் கொங்கு நாடு என்பது பல்வேறு வளங்களைக் கொண்ட நிலப்பதியாகும். இப்பகுதி குறித்து தமிழில் பலரும் பல நூல்களை எழுதியுள்ளனர். ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதப் பட்டுள்ளன. தமிழகத்தின் வேறுபகுதிகளுக்கு மிகக் குறைந்த அளவில் வரலாறு எழுதப்பட்டிருந்தாலும் கொங்குநாடு தொடர்பாகவே விரிவாகஎழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்கான காரணம் இப்பகுதி தொடர்பான விரிவான பதிவுகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பதே ஆகும். இப்பகுதியில்தான் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர். கோசர் போன்ற பல்வேறு குடிகளும் இப்பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பண்டைத் தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு கூறுகளைக் கொங்குநாட்டு வரலாற்றின் மூலமாகவே அறிய முடிகிறது. சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என அனைத்து மன்னர்களும் இப்பகுதியில் ஆட்சி செலுத்தியதை அறிகிறோம்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல்லவ வரலாறு, கொங்கு நாட்டு வரலாற்றிற்கு அடுத்த நிலையில் அமைவதாகும். மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன், ஆகியவர்கள் குறித்து மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய வரலாறு தனித்த நிலையில்
கூ றத்தக்கதாகும். தமிழில் அவரே விரிவான பதிவுகளை முதல் முதல் செய்தவர் எனலாம். பல்லவ மன்னர்களின் அனைத்து அம்சங்களையும் மேற்குறித்த நூல்களில் அவர் பதிவு செய்துள்ளார். இத்தொகுதியில் மன்னர்களின் வரலாறு தொடர்பானவை மட்டும் தனித்து கொடுக்கப் பட்டுள்ளன.

இலங்கையில் வாழும் தமிழர்கள் குறித்து மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய செய்திகள் இப்பகுதியில் இணைக்கப் பட்டுள்ளன.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.

சென்னை - 96
ஏப்ரல்2010

வீ. அரசு
தமிழ்ப்பேராசிரியர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்

results matching ""

    No results matching ""